அரசுப் பள்ளி முற்றுகை
By DIN | Published On : 05th July 2019 08:37 AM | Last Updated : 05th July 2019 08:37 AM | அ+அ அ- |

ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனக் கூறி, தச்சூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை பொது மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
ராமநத்தம் அடுத்த தச்சூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதில்லை எனவும், பள்ளியில் உள்ள மேசை, நாற்காலி போன்ற பொருள்களை வெளியில் கொண்டு சென்றுவிடுவதாகவும் அந்தப் பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து விவரம் அறியவரும் பெற்றோரை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.