என்எல்சியில் சாலை உரிமை தினம்
By DIN | Published On : 05th July 2019 08:26 AM | Last Updated : 05th July 2019 08:26 AM | அ+அ அ- |

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், சாலை உரிமை தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நெய்வேலி நகரியம் 30 நகரக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இங்குள்ள சாலைகள் மீது தனது உரிமையை நிலைநாட்டும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் சாலை உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களைத் தவிர, மற்ற அனைத்து வாகனங்களும் என்எல்சி இந்தியா நிறுவன வளாகத்தில் உள்ள சாலைகளில் இயங்கத் தடை விதிக்கப்படும். எனினும், சில முக்கிய காரணங்களுக்காக நிறுவன சாலைகளில் வாகனங்களை இயக்க இலவச அனுமதி நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, நிகழாண்டிற்கான சாலை உரிமை தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார். அப்போது, அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச நுழைவு அனுமதி சீட்டுகளை வழங்கினார். நிகழ்வில், நகர நிர்வாகப் பொது மேலாளர் சந்திரசேகர், தீயணைப்புத் துறை துணைப் பொது மேலாளர் ஆர்.நாகராஜன், நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜேஷ்கண்ணா, டிஎஸ்பி. ம.லோகநாதன், நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி ஆர்ச் கேட், இந்திரா நகர் ஆர்ச் கேட், சொரத்தூர், கைகலர்குப்பம், அம்மேரி, முத்தாண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள நுழைவுப் பகுதியில் நான்கு சக்கர வாகனங்களுக்கு இலவச நுழைவு அனுமதிச் சீட்டுகளை வழங்கினர்.