Enable Javscript for better performance
இனத்துக்கும், மொழிக்கும் நூல்களே அடையாளம்: திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன்- Dinamani

சுடச்சுட

  

  இனத்துக்கும், மொழிக்கும் நூல்களே அடையாளம்: திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன்

  By DIN  |   Published on : 09th July 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajuu

  இனத்துக்கும், மொழிக்கும் அடையாளமாக திகழ்பவை நூல்கள்தான் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் கூறினார். 
  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெறும் 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 3-ஆம் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற, தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் பேசியதாவது: 
  ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று அறிஞர் அண்ணா கூறினார். ஒரு இனத்துக்கும், நிலத்துக்கும், மொழிக்கும் அடையாளமாக திகழ்வது நூல்களும், நூலகமும்தான். அதனால்தான் யுத்தமானாலும், இன அழிப்பாக இருந்தாலும் நூலகத்தை அழிப்பதை யுத்தியாக வைத்திருப்பர். அதே நேரத்தில் நிலத்தை, இனத்தை, ஒரு வரலாற்றை உருவாக்குவதென்றால் அதிகமான நூலகத்தை உருவாக்குவர். புத்தகமும், நூலகமும்தான் நமது வரலாற்றைத் தீர்மானிக்கின்றன என்றார் அவர். 
  நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் என்.என்.எம்.ராவ் தலைமை வகித்துப் பேசியதாவது: புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு மிக முக்கியம். படிப்பதை அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
  இந்த முறை 147 குறும்படங்கள் போட்டிக்கு வரப்பெற்றன. அதில், 37 குறும்படங்கள் நெய்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாசிக்காமல் இருக்கும் மனிதன், வாசிக்கத் தெரியாத மனிதனைவிட உயர்ந்தவன் அல்ல என்றார் அவர்.
  முன்னதாக, பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் சோம.வீரப்பனுக்கு பொற்கிழி, பாராட்டுப் பத்திரத்தையும், பாராட்டு பெறும் பதிப்பாளர்கள் வரிசையில் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் சார்பில் பங்கேற்ற ரவிக்குமாருக்கு பாராட்டு பத்திரம், கேடயத்தையும் ராஜூ முருகன் வழங்கினார்.
  தொடர்ந்து, தினமணி நாளிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய விழிப்புணர்வு குறும்படப் போட்டியில் முதலிடம் பெற்ற இயக்குநர் ஜெய் சீ ( குறும்படத்தின் பெயர் - தோழர்) , இரண்டாமிடம் பெற்ற இயக்குநர் எஸ்.சூர்யா நாராயணன் (தி வேல்டு லீடர்), மூன்றாம் இடம் பெற்ற இயக்குநர் ஜெரின் ((சு)தந்திரம்) ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்றுகளை ராஜூ முருகன் வழங்கினார். பொது குறும்படப் போட்டியில் முதலிடம் பெற்ற இயக்குநர் தனசேகர் மோகன் (மீனா),  இரண்டாமிடம் பெற்ற இயக்குநர் சுவாமிராஜன் (பாரம்), மூன்றாமிடம்  பெற்ற இயக்குநர் ராஜா வரதராஜன் (சீற்றம் கொள்) ஆகியோருக்கு 
  என்எல்சி இயக்குநர் என்.என்.எம்.ராவ் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
  நெய்வேலி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை, கவிதை தொகுப்பு நூலை நிறுவன இயக்குநர் என்.என்.எம்.ராவ் வெளியிட, முதல் பிரதியை ராஜூ முருகன் பெற்றுக்கொண்டார். 
  கலை, இலக்கிய நிகழ்ச்சியில் திரைப்படமும் சமூகப் பொறுப்பும் என்ற தலைப்பில் ராஜூ முருகன் பேசினார்.

  புத்தகக் கண்காட்சியில் இன்று...

  நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் திங்கள்கிழமை நடைபெற உள்ள நான்காம் நாள் நிகழ்ச்சிக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் செளக்கி தலைமை வகிக்கிறார். குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி ராமச்சந்திரன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறார்.
   பாராட்டு பெறும் எழுத்தாளர்கள் வரிசையில் அமலநாயகம், பாராட்டு பெறும் பதிப்பகத்தார் வரிசையில் கங்கா ராணி பதிப்பகத்தார் ஆகியோர் கெளரவிக்கப்பட உள்ளனர். சா.சாயிசுதா எழுதிய, "ஒரு கைப்பிடியும் கால் கிலோவும்' என்ற நூல் வெளியிடப்படுகிறது. கலை இலக்கிய நிகழ்ச்சியில் பிள்ளைகளை ஆளாக்கி வளர்ப்பதில் அதிகம் உழைப்பவர் அன்னையா?  தந்தையா? என்ற தலைப்பில் சுகி. சிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai