மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலைப் பல்கலை. பதிவாளர்

மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் கூறினார்.

மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் கூறினார்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 7-ஆம் நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் என்.சதீஷ்பாபு தலைமை வகித்து பேசியதாவது:
 நல்ல விதை நல்ல மரத்தை உருவாக்கும். அதேபோல, நல்ல நூல் நல்ல மனிதனை உருவாக்கும். நல்ல விஷயங்களை வாங்கும் மனது விரிவடைகிறது. பின்னர் அது சுருங்குவதில்லை. எழுத்தாளர்களையும், பதிப்பகத்தாரையும் ஊக்கப்படுத்த பொதுமக்கள் அதிகளவில் புத்தகம் வாங்க வேண்டும் என்றார் அவர்.
 முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் பேசியதாவது:
 முந்தைய காலத்தில் புலவர்களுக்கு அரசர்கள் பொற்காசுகள், பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். அதேபோல, என்எல்சி இந்தியா நிறுவனம் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை கெளரவிக்கிறது. இந்தப் பணி தொடர வேண்டும்.
 எழுத்தாளர்களை பாராட்ட வேண்டும் என்றால், நாம் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தினமும் ஒரு மணி நேரம் சிறந்த தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும். தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கே அதிக தமிழ் வார்த்தைகள் தெரியாத நிலை உள்ளது. நமது எண்ணக் கருத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றால் நல்ல மொழித் திறன் அவசியம். வீட்டில் குழந்தைகளிடம் நல்ல தமிழில் பேசுங்கள். பள்ளி அளவில் மாணவர்கள் தமிழ் வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். அதை தமிழாசிரியர்களும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மாணவர்களின் எண்ணத்தைப் புரிந்து, அவர்களின் கவனத்தை ஈர்த்து, தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழாசிரியர்களிடம் வர வேண்டும் என்றார் அவர்.
 பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் எஸ்.சீனிவாசனுக்கு பொற்கிழி, பாராட்டுப் பத்திரத்தை என்.கிருஷ்ணமோகன் வழங்கினர். பாராட்டு பெறும் பதிப்பாளர்கள் வரிசையில் சென்னை சகுந்தலை நிலையத்தைச் சேர்ந்த ராமநாதனுக்கு பாராட்டு பத்திரம், கேடயத்தை என்எல்சி இந்தியா செயல் இயக்குநர் என்.சதீஷ்பாபு வழங்கினார். தொடர்ந்து, என்.கிருஷ்ணமூர்த்தி எழுதிய "உழைப்பவருக்கே உரிமை' என்ற நூலை என்.கிருஷ்ணமோகன் வெளியிட, முதல் பிரதியை என்.சதீஷ்பாபு பெற்றுக்கொண்டனர்.
 முன்னதாக, கோபாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை சாய்பிரியா தொகுத்து வழங்கினார். கலை இலக்கிய நிகழ்ச்சியில் அபிநயா நாட்டியாலயா, அன்னா வர்கீஸ் மற்றும் நெய்வேலி பள்ளி குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிவசங்கரன் நன்றி கூறினார்.
 புத்தகக் கண்காட்சியில் இன்று...
 நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹேமந்த் குமார் தலைமை வகிக்கிறார். முதன்மை விருந்தினராக தமிழ்நாடு சட்டக் கல்லூரி துணைவேந்தர் கமலா சங்கரன் பங்கேற்கிறார்.
 பாராட்டு பெறும் எழுத்தாளர்கள் வரிசையில் பா.முத்துக்குமாரசுவாமி, பாராட்டு பெறும் பதிப்பாளர்கள் வரிசையில் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தார் ஆகியோர் கெளரவிக்கப்பட உள்ளனர்.
 ஜெ.டி.எஸ்.கலைச்செல்வி எழுதிய "அம்புகள்' என்ற நூல் வெளியிடப்பட உள்ளது. கலை, இலக்கிய நிகழ்வில் நவஜோதி குழுவினரின் பாட்டு மன்றம் நடைபெறுகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com