ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 12th July 2019 08:27 AM | Last Updated : 12th July 2019 08:27 AM | அ+அ அ- |

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் துறைமுகம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ஆல்பர்ட் தினகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரவீன்ராஜ் மற்றும் போலீஸார் புதன்கிழமை மாலையில் கடலூர் வழியாகச் செல்லும் விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பெட்டியில் 8 மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால், அந்த அரிசிக்கு யாரும் உரிமை கோராததைத் தொடர்ந்து அதைக் கைப்பற்றினர். பின்னர், மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் அரிசியை ஒப்படைத்தனர். இதுகுறித்து இரு பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் இரும்புப் பொருள்களை திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மேலும், கடலூர் துறைமுகம், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையங்களில் அனுமதியின்றி குடிநீர் விற்பனை செய்ததாக 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.