சுடச்சுட

  

  ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 
  13 ஆண்டுகள் பணி முடிந்தவுடன் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்த அரசு மருத்துவர்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அரசு மருத்துவர்களுக்கான பட்ட மேற்படிப்பில் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 
  மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் பணியை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் நோயாளிகளின் எண்ணிக்கையை பொருத்தும் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.  
  மறுசீரமைப்பு என்ற பெயரில் ஏற்கெனவே பணியிலிருக்கும் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
  போராட்டத்துக்கு, ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க மாநில பொருளாளர் டி.கேசவன் தலைமை வகித்தார். பட்ட மேற்படிப்பு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க மாநிலச் செயலர் சாமிநாதன், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முத்துக்குமரன், செயலர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரளான மருத்துவர்கள் பங்கேற்றனர்.  
  வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை முடித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். 
  தங்களது கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், வருகிற 15, 16-ஆம் தேதிகளில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முத்துக்குமரன்  கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai