சுடச்சுட

  

  தேசிய மக்கள் நீதிமன்றம்: 4,475 வழக்குகளுக்கு தீர்வு:ரூ.24.88 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

  By DIN  |   Published on : 14th July 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.24.88 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
   நீதிமன்றங்களில்  தேங்கும்  வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையிலும், சமரசம் செய்யக்கூடிய வழக்குகளை மாற்றுமுறை தீர்வு மையம் மூலமாக தீர்த்திடவும் உச்ச நீதிமன்றம் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அறிவித்தது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. 
   கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமையில் 34 அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், மாவட்ட நீதிபதி (மக்கள் நீதிமன்றம்) கே.அய்யப்பன் பிள்ளை, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.திருவேங்கட சீனுவாசன், முதன்மை மற்றும் முதலாவது சார்பு நீதிபதி எம்.மூர்த்தி, இரண்டாவது கூடுதல் சார்பு-நீதிபதி பிரபாவதி, கூடுதல் மாவட்ட நீதிபதி (நில எடுப்பு) கோபிநாத், சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலர் மற்றும் சார்பு நீதிபதி கே.ஜோதி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரணையில் பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், வழக்காடிகள் ஆஜராகி வாதாடினர்.
  நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, குடும்ப விவகாரம், சிறு வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 6,800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில், ஒரே நாளில் 4,475 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.24.88 லட்சம் வழங்கிட உத்தரவிடப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,400 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்கப்படும் தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால், இந்த வழக்குகள் இத்தோடு முடிவுக்கு வருவதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
  சிதம்பரம்: இதேபோல, சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கே.கருணாநிதி தலைமை வகித்தார். வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான வி.எம்.நீஷ் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.முருகபூபதி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் ஜே.சிலம்புச்செல்வன், பி.கோபாலகிருஷ்ணன், சமூக சேவகர் எம்.தேவதாஸ் ஆகியோர் 3 அமர்வுகளாக விசாரணை மேற்கொண்டனர். 
   விசாரணையில், 378 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 87 லட்சத்து 24,075 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் அலுவலக முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்ராமன் செய்திருந்தார்.
  பண்ருட்டி: பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-1 ஆர்.கற்பகவல்லி தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் பாண்டியன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமர்வில் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டதில், 849 வழக்குகளுக்கு ரூ.58.72 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டன. ஏற்பாடுகளை முதுநிலை நிர்வாக உதவியாளர் சையத் ரஷீத் செய்திருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai