புத்தகம் வாசிப்பதும் ஒருவகை தியானமே; ஆர்.நிரஞ்சன் பாரதி

புத்தகம் வாசிப்பதும் ஒருவகை தியானம்தான் என்று கவிஞர் ஆர்.நிரஞ்சன் பாரதி கூறினார்.


புத்தகம் வாசிப்பதும் ஒருவகை தியானம்தான் என்று கவிஞர் ஆர்.நிரஞ்சன் பாரதி கூறினார்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 9-ஆம் நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநர் அரவிந்த் குமார் பேசுகையில், புத்தகம் வாசிப்பு மனிதனின் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது என்றார்.
 சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ஆர்.நிரஞ்சன் பாரதி பேசியதாவது: பள்ளி பாடப் புத்தகங்கள் மனப்பாட புத்தகங்களாக இருந்தனவே தவிர, வாழ்க்கைப் பாடத்தை கற்றுத்தரவில்லை. மதிப்பெண்களுக்காக படிக்கப்படும் புத்தகம் ஒருபோதும் நமது வாழ்க்கையின் மதிப்பை வளர்ப்பதில்லை. பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம். ஆனால், மனம் இருந்தால் மட்டுமே அதைப் படிக்க முடியும். மொழி அறிவு இருந்தால் புத்தகத்தை வாசிக்க முடியும். ஆனால், புத்தகம் வாசிக்க பொறுமை தேவை. இன்றைய காலத்தில் அனைவரிடமும் திறமை உள்ளது. ஆனால், பொறுமை இல்லை. 
 புத்தகம் வாசிப்பதும் ஒருவகை தியானமே. காட்டுக்குள் சென்றால்தான் தியானம் செய்ய முடியும் என்பதில்லை. ஏட்டுக்குள் சென்றாலும் தியானம் செய்யலாம். ஒரு புத்தகம் திறக்கப்படும்போது நமக்குள் மூடியுள்ள ஒரு சாளரம் திறக்கப்பட வேண்டும். அதுதான் சிறந்த புத்தகம் என்றார் அவர். 
 நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் பேசியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனம் தொடர்ந்து 22 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர். கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இது என்எல்சி நிறுவனத்தின் சிறப்பான பணி. மனிதனிடம்  3 குணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாம் அனைவரும் சாத்வீக குணத்தை நோக்கிச் செல்ல வேண்டும். நம்மை நாமே 
உயர்த்திக்கொள்ள புத்தகங்கள் பயன்படுகின்றன என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் சி.எஸ்.முருகேசனுக்கு பொற்கிழி, பாராட்டுப் பத்திரத்தை பி.ரவீந்திரன் வழங்கினர். பாராட்டப்படும் பதிப்பாளர்கள் வரிசையில் சென்னை ராம்கா புக்ஸ் மாசிலாமணிக்கு பாராட்டு பத்திரம், கேடயத்தை நிரஞ்சன் பாரதி வழங்கினார். 
 தொடர்ந்து, கவிஞர் தேன்தமிழன் எழுதிய குளிரில் நடுங்கும் நெருப்பு' என்ற நூலை பி.ரவீந்திரன் வெளியிட, முதல் பிரதியை செயல் இயக்குநர் அரவிந்த்குமார் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, விஜயகுமாரி வரவேற்றார். கலை, இலக்கிய நிகழ்வில், உன்முக்தா சின்ஹா குழுவினரின் பன்முகக் கலாசார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தகக் கண்காட்சி இன்று நிறைவு 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி அரங்கில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நிறைவடைகிறது.
 நெய்வேலியில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ்  ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி, நிகழாண்டு 22-ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் 170 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அதேபோல, தினமும் ஒரு எழுத்தாளர், பதிப்பாளர் வீதம் கௌரவிக்கப்பட்டனர். தினமும் ஒரு நூல் வெளியிடப்பட்டது. 
 10 நாள் புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி, பழுப்பு நிலக்கரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் தலைமை வகிக்கிறார். 
முதன்மை விருந்தினராக கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பங்கேற்கிறார். பாராட்டு பெறும் எழுத்தாளர்கள் வரிசையில் ஜெ.கமலநாதனும், பாராட்டு பெறும் பதிப்பாளர்கள் வரிசையில் சென்னை டைகர் புக்ஸ் நிறுவனத்தாரும் கெளரவிக்கப்பட உள்ளனர். 
மேலும், நிகழ்ச்சியில், அரசை இரா.மணிவாசகம் எழுதிய நூல் வெளியிடப்பட உள்ளது. கலை இலக்கிய நிகழ்ச்சியில் மாஸ்டர் லிடியன் நாதஸ்வரம் சார்பில் பியானோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com