அய்யனார் கோயில் விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
By DIN | Published On : 19th July 2019 02:22 AM | Last Updated : 19th July 2019 02:22 AM | அ+அ அ- |

காடாம்புலியூர் அய்யனார் கோயில் விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இந்த நிலையில், கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்வது தொடர்பாகவும், அங்குள்ள சக்தி மாரியம்மன் பெரிய கோயிலில் செடல் உற்சவ விழா நடத்துவது தொடர்பாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கோரிக்க எழுந்தது.
இதையடுத்து, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் கீதா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், 4 தெருக்களைச் சேர்ந்த நபர்கள் மன ஒற்றுமை அடிப்படையில் குழு அமைத்து வசூல் செய்து அய்யனார் கோயில் திருப்பணிகளை மேற்கொள்வது. கரக வழிபாடு, வேண்டுதலை நிறைவேற்ற எவரும் மற்றொருவரை தடுக்கக் கூடாது.
மாரியம்மன் கோயில் விழாவை 4 தெருக்களைச் சேர்ந்த அனைவரும் இணைந்து நடத்துவது.
காடாம்புலியூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்த மற்ற 3 தெருக்களைச் சேர்ந்தவர்கள் இடையூறு செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டு அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.