Enable Javscript for better performance
மனைவி கொலை:  கணவர் போலீஸில் சரண்- Dinamani

சுடச்சுட

    

    காட்டுமன்னார்கோயிலில் வரதட்சிணை தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவர், காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மாளிகைமேடு கிராமத்தில் ராஜன் வாய்க்கால் தெருவில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி மகன் சுரேஷ் (32 ). இவருக்கும், கந்தகுமாரன் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகள் அமலாவுக்கும் (24) திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறதாம். தம்பதிக்கு அகிலன் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. 
    தம்பதியிடையே அடிக்கடி வரதட்சிணை காரணமாக தகராறு 
    ஏற்படுவது  வழக்கமாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில், அமலாவின் கழுத்தை நெறித்து சுரேஷ் கொலை செய்ததாகத் தெரிகிறது.
    புதன்கிழமை தகராறு குறித்து விசாரிக்க வந்த அமலாவின் தாய், மகள் இறந்து கிடப்பதைப் பார்த்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
    அதன் பேரில், அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா, சடலத்தை மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்.
    இந்த நிலையில், போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த சுரேஷ், முட்டம் கிராம நிர்வாக அலுவலர் உலகநாதனிடம் சரணடைந்தார். இதையடுத்து,  சுரேஷை காவல் நிலையம் அழைத்து வந்து சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.
    விசாரணையில், திருமணத்தின் போது பேசியபடி நகை போடவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும் சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதையடுத்து, சுரேஷின் மாமியார் அளித்த புகாரின் பேரில், சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் (பொ) ஆக்னேஷ் மேரி வழக்குப் பதிவு செய்து, சுரேஷை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai