முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சாதிய பிரச்னை தூண்டப்படுகிறது: பாமக, விசிக பரஸ்பரம் புகார்
By DIN | Published On : 30th July 2019 07:29 AM | Last Updated : 30th July 2019 07:29 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் சாதிய பிரச்னைகள் தூண்டப்படுவதாக பாமக, விசிக கட்சியினர் பரஸ்பரம் புகார் தெரிவித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், கடலூர் மக்களவை தொகுதி பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
கடந்த 27-ஆம் தேதி கடலூர் முதுநகரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன், விசிகவினரையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். நகர செயலர் மு.செந்தில், மாநில நிர்வாகிகள் பெ.பாவாணன், த.கிட்டு, சக்திவேல், பிரதீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாமக மனு: இந்த நிலையில், பாமக மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன், மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 19, 26-ஆம் தேதிகளில் கடலூர், கடலூர் முதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பேசிய விசிகவினர், பாமகவினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர்.
இதன் மூலமாக சாதிய மோதலுக்கு திட்டமிட்டுள்ளனர். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மாநில நிர்வாகிகள் பி.ஆர்.பி.வெங்கடேசன், போஸ் ராமச்சந்திரன், சந்திரசேகர், இள.விஜயவர்மன், மாவட்டத் தலைவர் ம.ராஜ்குமார், நகரத் தலைவர் ராஜ்குமார், இளைஞரணி வாட்டர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.