முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
By DIN | Published On : 30th July 2019 07:25 AM | Last Updated : 30th July 2019 07:25 AM | அ+அ அ- |

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடி மாத உற்சவம் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ஆம் தேதி தேர்த்
திருவிழா நடைபெற்றது.
இந்த நிலையில், திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு போடுதல், பால்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதலை செலுத்தினர். மேலும் பலர் உடலில் செடல் குத்தி வீதி வலம் வந்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கரகம் புறப்பட்டு வீதிஉலா வந்து கோயிலுக்கு எதிரே உள்ள தீக்குழியில் மாலை 6 மணிக்கு இறங்கிய பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் என்.வீராசாமிபிள்ளை, அறங்காவலர்கள் என்.கலியமூர்த்தி, என்.செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர். மனித நேய மேம்பாட்டு இயக்கத் தலைவர் தில்லை சீனு, தில்லை ஆர்.மக்கீன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவை முன்னிட்டு மிஸ்ரிமல் மஹாவீர் சந்த் டிரஸ்ட்
சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். செயலர் தீபக்குமார் முன்னிலை வகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோரை உதவி ஆட்சியர் விசுமஹாஜன் வழங்கி தொடக்கி வைத்தார்.