குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.


கடலூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடலூர் அரசினர் தொழில்பயிற்சி நிலைய மாணவர்கள் சுமார் 500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பங்கேற்ற மாணவர்கள் கடலூர் நகர அரங்கிலிருந்து அண்ணா விளையாட்டரங்கம் வரை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு சென்றனர். 
பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடக்கி வைத்துப் பேசியதாவது: 
குழந்தை தொழிலாளர் முறை என்பது நாகரிக சமூகத்தின் ஓர் அவல நிலையாகும். 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை எவ்வித தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது. அதேபோல, 18 வயதுக்கு உள்பட்டோரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றமாகும். கடலூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாவட்டமாக உருவாக்க மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்புப் படை மூலம் கூட்டாய்வுகள் மற்றும் முறை ஆய்வுகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
மாவட்டத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்திய 6 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அபராதமாக ரூ. 1.50 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும்,  கடை உரிமையாளர் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டால், அதன் உரிமையாளருக்கு நீதிமன்றம் மூலம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாவட்டமாக உருவாக்க அனைவரும் இந்த நாளில் உறுதி ஏற்போம். 
குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை தெரிவிக்க சைல்டு லைன் 1098 (இலவச தொலைபேசி எண்) மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை 04142-225984 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலர் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மு.பாஸ்கரன், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) எம்.ராஜசேகரன், தொழிலக பாதுகாப்பு - சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் பர்வதம்மாள், மாவட்ட குழந்தை நல அலுவலர் திருமால்வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில்...: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமை நிர்வாக அலுவலகத்தில் பல்கலை. துணைவேந்தர் வே.முருகேசன் முன்னிலையில், பல்கலை. பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் உறுதிமொழியை வாசிக்க, ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் மொழியியல் புல முதல்வர் வி.திருவள்ளுவன், பல்வேறு புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com