உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு
By DIN | Published On : 14th June 2019 07:32 AM | Last Updated : 14th June 2019 07:32 AM | அ+அ அ- |

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு பொருள்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூர் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நடமாடும் உணவுப் பரிசோதனைக் கூடம் மூலம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள், பொதுமக்களுக்கு உணவு கலப்படத்தை எளிதில் கண்டறியும் முறை, கலப்படத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். உணவுப் பாதுகாப்பு அலுவலர் சி.சுந்தரமூர்த்தி, பெ.நல்லதம்பி, க.சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்புச் சங்க தலைவர் வேம்பு, ஓபிஆர் நினைவு செவிலியர் கல்லூரி முதல்வர் சுகந்திராதேவி, செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.