சுடச்சுட

  

  மின் தடை குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் முறை: வாடகைதாரர்கள் பாதிப்பு

  By DIN  |   Published on : 14th June 2019 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின் தடை குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் முறையால் வாடகைதாரர்கள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
  கடலூர் மாவட்டம்  முழுவதும் குறைவழுத்தம் கொண்ட மின் இணைப்புகள் வீடு, கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மொத்தம் 8.83 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உயரழுத்த மின் இணைப்புகள் சுமார் 2 ஆயிரத்துக்குள் உள்ளன.
  இந்த நிலையில், கடலூர் மாவட்ட மின்சார வாரியம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு மின் தடை குறித்த குறுந்தகவலை அனுப்பி வருகிறது. மின் தடை காலை முதல் மாலை வரை இருக்கும் என்பதால், அதை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில், பத்திரிகைகளில் செய்தியாக வழங்கப்படும். 
  தற்போது, இந்த நடைமுறையில் மாற்றம் செய்து வாடிக்கையாளரின் செல்லிடப்பேசிக்கே குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், இந்த குறுஞ்செய்தியால் அதிகமாக வாடகை வீட்டில் வசிப்போர், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பெரும்பலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
  ஏனெனில், நகர்ப்புறங்களில் சொந்த வீடுகளைவிட வாடகை வீட்டில் குடியிருப்போரே அதிகமாக உள்ளனர். மின் இணைப்பை வீட்டின் உரிமையாளர் தனது பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோதான்  பெற்றிருப்பார். எனவே, வீட்டின் உரிமையாளர் செல்லிடப்பேசி எண்ணுக்கு மின் தடை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
  அந்த குறுஞ்செய்தியை அவர் தனது வீட்டில் குடியிருப்போருக்கு தெரியப்படுத்துவதில்லை. இதேபோல, நகரில் அமைந்துள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் வாடகைக்கு இயங்குவதாகவே இருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கே குறுஞ்செய்தி சென்றடைகிறது. இதனால், மின் தடை குறித்த தகவலை வர்த்தக நிறுவனங்களும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியவில்லை. இதே நிலைதான் கல்வி நிறுவனங்களிலும் ஏற்படுகிறது.
  எனவே, குறுஞ்செய்தி அனுப்புவதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மின் தடை குறித்து முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
  இதுகுறித்து கடலூர் மின் கோட்டக் கண்காணிப்புப் பொறியாளர் சே.சத்தியநாரயணன் கூறியதாவது:
  தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள செல்லிடப்பேசிகளுக்கு மின் தடை குறித்து குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. வாடகைதாரர்களுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை உணர்ந்துள்ளோம். 
  எனவே, குறுஞ்செய்தி அனுப்புவதுடன் வழக்கம் போல, பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவதையும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai