கடலூரில் அனல் காற்று: பரிதவிக்கும் மக்கள்
By DIN | Published On : 14th June 2019 07:29 AM | Last Updated : 14th June 2019 07:29 AM | அ+அ அ- |

கடலூரில் கடந்த ஒருவார காலமாக அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோடை காலத்தின் உச்சமான கத்திரி வெயில் காலம் நிகழாண்டு முடிந்தபோதிலும் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்கிறது. காலைப் பொழுதிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மதிய வேளைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதியடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். பலர் தங்களது முகத்தை துணியால் மூடியபடி செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள்
பெரும்பாலோர் வீடுகளில் முடங்கிவிடுகின்றனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வானிலை மைய பொறுப்பாளர் பாலமுருகன் கூறியதாவது: கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு திசையில் இருந்து வெப்பக் காற்று வீசி வருகிறது. கடலூரில் புதன்கிழமை அதிகபட்சமாக 104.9 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றார் அவர்.