கடலூரில் நாளை உலக இசை தினப் போட்டி
By DIN | Published On : 18th June 2019 09:21 AM | Last Updated : 18th June 2019 09:21 AM | அ+அ அ- |

உலக இசை தினத்தை முன்னிட்டு, கடலூரில் புதன்கிழமை இசைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரெ.வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக இசை தினத்தை முன்னிட்டு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் இசைப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூரில் அமைந்துள்ள மாவட்ட இசைப் பள்ளியில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள் புதன்கிழமை (ஜூன் 19) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், 15 முதல் 30 வயது வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழிசை, கிராமியப் பாடல்கள், முதன்மை கருவியிசை (நாகஸ்வரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டு வாத்தியம், கிளாரினெட் போன்றவை), தாளக் கருவியிசை (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்தப் போட்டிகளில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடப்படவோ அல்லது இசைக்கவோ வேண்டும். போட்டியாளர்கள் தங்களுக்குத் தேவையான இசைக் கருவிகளை அவரவரது சொந்தப் பொறுப்பில் எடுத்து வர வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிகளில் பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04142-232021 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.