குழாயில் உடைப்பு: குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
By DIN | Published On : 18th June 2019 09:35 AM | Last Updated : 18th June 2019 09:35 AM | அ+அ அ- |

பண்ருட்டி, மேலப்பாளையம் இணைப்புச் சாலை அருகே குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன்மூலம் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.
பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நகராட்சி அலுவலகம் பின்புறம், திருவதிகை, பேருந்து நிலையம், லட்சுமிபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மேலப்பாளையம் பாட்டை பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இணைப்புச் சாலையில் மேலப்பாளையம் செல்லும் வழியின் எதிரே, நேதாஜி நகரில் இருந்து குடிநீர் செல்லும் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த உடைப்பை நகராட்சி ஊழியர்கள் முறையாக சீரமைக்கவில்லையாம். மாறாக அந்த இடத்தில் பள்ளம் தோண்டி, உடைப்பு ஏற்பட்ட குழாயில் சைக்கிள் டியூபை கட்டியுள்ளனராம். ஆனால், அழுத்தம் காரணமாக கசிந்து வெளியேறும் தண்ணீர் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. மேலும், இதனருகே பிரதானக் கழிவுநீர் கால்வாய் செல்வதால் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். குடிநீர் கலங்கலாக வரும் நிலையில் தொற்றுநோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து நகர நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.