சுரங்க விரிவாக்கத்துக்கு வீடுகளை கையகப்படுத்த முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக தாண்டவன்குப்பத்தில் வீடுகளைக் கையகப்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முயன்றனர்.

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக தாண்டவன்குப்பத்தில் வீடுகளைக் கையகப்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முயன்றனர். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பால் இந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம்-1 விரிவாக்கத்துக்காக தாண்டவன்குப்பத்தில் உள்ள வீடுகளை கையகப்படுத்தும் பணியில் அந்த நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன.
 ஏற்கெனவே இந்தப் பகுதியிலிருந்த ஆட்டோ கேட், ஒர்க்ஷாப் கேட், பழைய தாண்டவன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 550 வீடுகள் கையகப்படுத்தப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு வீடு கட்டுவதற்கு மற்றொரு பகுதியில் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், தற்போது தாண்டவன்குப்பத்தில் உள்ள எஸ்.பிளாக், எஸ்.இ. பிளாக் பகுதிகளில் சுமார் 190 பேர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களை கணக்கிட்டு, சுமார் 120 குடும்பத்தினருக்கு விருத்தாசலம் அருகே உள்ள பாலக்கொல்லை கிராமத்தில் தலா 1.5 சென்ட் நிலம் வழங்க வருவாய்த் துறை முன்வந்தது.
 ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அந்தப் பகுதி மக்கள், தலா 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும்; தங்களது வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 இந்த நிலையில், தாண்டவன்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளை கையகப்படுத்துவதற்காக என்எல்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணியளவில் அங்கு வந்தனர்.
 பாதுகாப்புக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனர். அப்போது, பொதுமக்கள் தங்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், சுமார் 60 பெண்களை போலீஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்களை போலீஸார் விடுவித்தனர்.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். அவர், வருவாய்த் துறையினரிடம், "பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதுவரை வீடுகளை கையகப்படுத்த வேண்டாம்' என்று கூறினாராம்.
 இதையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com