தீப்பிடித்த வீட்டில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
By DIN | Published On : 23rd June 2019 12:51 AM | Last Updated : 23rd June 2019 12:51 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தீப்பிடித்த வீட்டில் பெண்ணின் சடலம் கருகிய நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
விழுப்புரம், பெரியகாலனி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி பத்மபிரியா (22). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், பத்மபிரியா தனது தம்பியின் திருமணத்துக்காக பண்ருட்டி அருகே உள்ள பாபுகுளத்துக்கு வந்தார். திருமணம் கடந்த 20-ஆம் தேதி முடிந்த நிலையில் பத்மபிரியா தொடர்ந்து பாபுகுளத்திலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் பத்மபிரியாவின் பக்கத்து வீட்டின் கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.
பின்னர், அங்கிருந்த இடிபாடுகளை அகற்றியபோது, கரும்பு சோகைக்குள் எரிந்த நிலையில் பத்மபிரியா சடலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த மு.மணவாளன் (51) பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பத்மபிரியாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.