விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ரூ.1.74 கோடியில் சி.டி. ஸ்கேன் மையம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்
By DIN | Published On : 24th June 2019 07:39 AM | Last Updated : 24th June 2019 07:39 AM | அ+அ அ- |

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ரூ.1.74 கோடியில் அமைக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் மையத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
விருத்தாசலத்தில் 182 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சாலை விபத்து, பிற விபத்துகளில் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெற சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால் விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் சி.ஆர்.எம். ஆய்வுக் குழு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில், விபத்து மற்றும் பிற விபத்துகளில் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஆண்டறிக்கையின் மூலம் உறுதி செய்தது. எனவே, இந்த மருத்துவமனைக்கு புதியதாக சி.டி. ஸ்கேன் வசதி தேவை என தீர்மானித்தது. மேலும், அதை வாங்குவதற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் ரூ.1.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, சி.டி. ஸ்கேன் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து புதிய இயந்திரத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில், மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த மையத்தை தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: ரூ.1.74 கோடியில் அமைக்கப்பட்ட இந்த சி.டி. ஸ்கேன் மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மின் இணைப்பு ரூ.4.8 லட்சத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் பெறப்பட்டது. இனிமேல், விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலேயே முழுமையான சிகிச்சையை பொதுமக்கள் பெற முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இணை இயக்குநர் (மருத்துவம்) ஆர்.கலா, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.