இருதய குறைபாடுள்ள குழந்தைக்கு மருத்துவ உதவி: ஆட்சியர் நடவடிக்கை
By DIN | Published On : 25th June 2019 08:50 AM | Last Updated : 25th June 2019 08:50 AM | அ+அ அ- |

இருதய குறைபாடுள்ள குழந்தைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கட்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது மனைவி பூமதி (24). இவர்களுக்கு சுபேந்திரன் என்ற 9 மாத குழந்தை உள்ளது.
பொதுவாக உடலின் இடதுபுறம் இருக்கவேண்டிய இருதயம், இந்தக் குழந்தைக்கு வலதுபுறம் அமைந்துள்ளதாம். மேலும், இருதயத்தில் பல குறைபாடுகள் உள்ளனவாம்.
இதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்தனராம். மேலும், இதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள ரூ.9 லட்சம் வரை செலவாகுமென கூறப்பட்டுள்ளது. ஆனால், கூலித் தொழிலாளியான பாலாஜி அவ்வளவு தொகையை திரட்ட முடியாமல் தவித்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வனை சந்தித்து பாலாஜி - பூமதி தம்பதியர் மனு அளித்தனர்.
உடனடியாக, ஆட்சியர் சென்னையில் மருத்துவத் துறை செயலரை தொடர்பு கொண்டு, குழந்தையின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர், கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மூலமாக சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து உடனடியாக தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.