பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்
By DIN | Published On : 25th June 2019 08:39 AM | Last Updated : 25th June 2019 08:39 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 420 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். கூட்டத்தில், 2016-17-ஆம் ஆண்டில் சென்னை மாவட்ட ஆட்சியராக வெ.அன்புச்செல்வன் பணிபுரிந்தபோது கொடிநாள் வசூலில் ரூ.1 கோடிக்குமேல் வசூல் செய்ததை பாராட்டி தமிழக ஆளுநரால் வழங்கப்பட்ட கேடயமும், சான்றிதழும் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகைக்கான ஆணையையும், இருவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வீ.வெற்றிவேல், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.