கண்காணிப்பு கேமராவுடன் காவல் துறைக்கு புதிய வாகனம்
By DIN | Published On : 02nd March 2019 09:30 AM | Last Updated : 02nd March 2019 09:30 AM | அ+அ அ- |

விபத்து, குற்றத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தை மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்காக, மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு கடலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவனை அணுகி, அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் பெறப்பட்டது. அதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் அந்த நிதியிலிருந்து மாவட்டத்தில் புதிதாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனம் (ஙர்க்ஷண்ப்ங் இஇபய இஹம்ஹழ்ஹ ஸ்ங்ட்ண்ஸ்ரீப்ங்) தயார்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பாதுகாப்புப் பணியிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படும். குற்றம் நடைபெறும் இடங்களில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு சுழலும் கேமரா மூலம் படங்கள் பிடிக்கப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.
இந்த, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் சுமார் 500மீ தொலைவில் நடைபெறும் சம்பவங்களையும் பதிவு செய்ய முடியும். இதனை, உயர் அலுவலர்கள் தங்களது செல்லிடப்பேசியில் நேரடியாக பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் விபத்துகள் அதிகமாக நடைபெறும் 71 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் வைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.