நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 09:31 AM | Last Updated : 02nd March 2019 09:31 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியக்குழு மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
அதன் விளைவாக கோரிக்கைகளை பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை டிசம்பர் மாதம் தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விற்பனையாளர்களுக்கு வழங்குவது போல நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.
அனைத்து வித பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் துரை.சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலர் ஜெயச்சந்திரராஜா, துணைத் தலைவர் கு.சரவணன், முன்னாள் மாவட்ட செயலர் மு.ராஜாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.