என்எல்சியில் மனித வளத் துறை தேசியக் கருத்தரங்கம்
By DIN | Published On : 04th March 2019 08:58 AM | Last Updated : 04th March 2019 08:58 AM | அ+அ அ- |

என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை, தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் நெய்வேலி மையம் ஆகியவை சார்பில், மனித வளத் துறை தொடர்பான இரண்டு நாள் தேசியக் கருத்தங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கை என்எல்சி இந்தியா நிறுவன முன்னாள் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
கெüரவ விருந்தினராகப் பங்கேற்ற பெங்களூரு பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனர் தலைவர் தீபக்குமார் பேசினார்.
கருத்தரங்க நோக்கம் குறித்து, என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் பேசுகையில், "இன்றைய வர்த்தக உலகில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை, குழப்பம் மிகுந்த தெளிவற்ற நிலை ஆகியவை எவ்வாறு வர்த்தகத்தைப் பாதிக்கிறது என்றும், அதை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பங்களையும், சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத செயல்முறைகளையும் பயன்படுத்த வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த என்எல்சி நிறுவன மின்துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன் பேசுகையில், "என்எல்சி இந்தியா நிறுவனம், வர்த்தக சூழலுக்கு ஏற்றவாறு நிலக்கரி அனல்மின் நிலையங்களை அமைத்தது, பசுமை மின் சக்தி துறையில் கால்பதித்தது மட்டுமன்றி, சமீபத்தில் உபரி மின் உற்பத்தியை நேரடியாக மின் வாரியங்களுக்கு விற்பனை செய்து வருகிறது' என்றார்.
கருந்தரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரி - சுரங்கத் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் செüத்ரி, மத்திய நிலக்கரி அமைச்சகச் செயலர் சுமந்தா செüத்ரி ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டன.
கருத்தரங்கின் நினைவாக மின்னணு முறையில் தயாரிக்கப்பட்ட விழா மலரை டாக்டர் ஆச்சார்யா வெளியிட, முதல் பிரதியை ஹோட்டா பெற்றுக் கொண்டார். நிகழ்வில், என்எல்சி இந்தியா திட்டம் - செயலாக்கத் துறை இயக்குநர் நாதள்ள நாக மகேஷ்வர் ராவ், மின் துறை இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சாஜி ஜாண், உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள், தொழில்சங்கங்கப் பிரதிநிதிகள், பொறியாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மனித வளத் துறை செயல் இயக்குநர் என்.முத்து வரவேற்றார். கருத்தங்கில் அரசு, தனியார் நிறுவனங்களின் மனித வளத் துறை அதிகாரிகள், என்எல்சி இந்தியா அதிகாரிகள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட சுமார் 320 பேர் பங்கேற்றனர். மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் சி.தியாகராஜூ நன்றி கூறினார்.