கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண்ணிடம் விசாரணை
By DIN | Published On : 04th March 2019 08:45 AM | Last Updated : 04th March 2019 08:45 AM | அ+அ அ- |

கடலூர் பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண்ணிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண், கொய்யாப்பழ வியாபாரிகளிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டைக் கொடுத்து பழம் வாங்க முயன்றார். அது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகம் எழவே, வியாபாரிகள் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். காவல் துறையினர் அங்கு வந்த போது, அந்தப் பெண் இல்லாததால், சந்தேகம் வலுத்தது. பின்னர், பண்ருட்டி செல்லும் பேருந்திலிருந்த அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சிதம்பரத்தைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி பரணிகுமாரி (34) என்பதும், அவரிடம் ரூ. 2 ஆயிரம் தாள்கள் 33, ரூ. 500 தாள்கள் 5, ரூ. 200 தாள்கள் 6 என ரூ. 69,700 கள்ள நோட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை விசாரணைக்காக திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: பிடிபட்ட பெண் தனது பெயர், ஊர் பெயரை மாற்றி மாற்றிக் கூறி வருகிறார். அவரிடமிருந்து ரூ. 69,700 கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம். அந்த நோட்டுகள் நகல் எடுக்கப்பட்டவை. எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடன் மேலும், 2 பேர் வந்ததாகவும், அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.