சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி: 7,500 கலைஞர்கள் பங்கேற்றனர்
By சிதம்பரம், | Published On : 04th March 2019 08:45 AM | Last Updated : 04th March 2019 08:45 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7,500 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனைக்கான பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், "நடேசர் கவுத்துவம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்ச்சி, காலை 8.45 மணிக்குத் தொடங்கி 25 நிமிஷங்கள் நடைபெற்றது.
நாட்டிய நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 7,500 பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று கோயில் உள்பிரகாரம், நடனப் பந்தல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடினர்.
இதற்கு முன்பு சென்னையில் 2017 -ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 4, 525 நடனக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடியதுதான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தச் சாதனையை முறியடிக்கும் விதத்தில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.முருகேசன் தொடக்க உரையாற்றினார். பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியன் கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். முன்னதாக, சி.ஞானஸ்கந்த தீட்சிதர் வரவேற்றார்.
தஞ்சை ஆர்ட்ஸ் - கல்சுரல் அகாதெமி நிறுவனர்
பி.ஹேரம்பநாதன், கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான கேடயத்தை வழங்கினார். சென்னை கிரியேட்டிவ் டீம் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விவேக் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சின்னமனூர் ஏ.சித்ரா, பொது தீட்சிதர்களின் செயலர் ஜெ.ந.நடேஷ்வர தீட்சிதர், துணைச் செயலர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர், தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவர் எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.சிவசங்கர தீட்சிதர், பொருளாளர் ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், உறுப்பினர்கள் ஆனந்த தாண்ட தீட்சிதர், விஜயபால தீட்சிதர், சிவச்செல்வ தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். இந்த பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சியையொட்டி, கடலூர் மாவட்ட எஸ்.பி. சரவணன் மேற்பார்வையில், சிதம்பரம் டிஎஸ்பி சு.கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.