2.51 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியர்
By DIN | Published On : 08th March 2019 09:23 AM | Last Updated : 08th March 2019 09:23 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் 2.51 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை தடுப்பதற்காக வருகிற 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டத்தில் நகரம், கிராமப்புறங்களில் உள்ள 193 துணை சுகாதார நிலையங்கள், 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், 8 தனியார் மருத்துவமனைகள், 124 பள்ளிகள், 1,075 அங்கன்வாடி மையங்கள், 50 நடமாடும் குழுக்கள் மற்றும் 98 பிற பகுதிகள் உள்பட 1,611 மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்தப் பணியில் 6,444 பணியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றனர்.
இதில், பிறந்தது முதல் 5 வயதுக்குள்பட்ட 2.51 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை பார்வையிட 190 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 10 சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமில் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்துகள் புதிதாக தயாரிக்கப்பட்ட, வீரியமிக்க, தரம் வாய்தததோடு, பாதுகாப்பானதாகும்.
எனவே, 5 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.