என்எல்சி சார்பில் தேசியக் கருத்தரங்கம்

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
 "அடுத்த தலைமுறை சந்திக்கவிருக்கும் சிக்கல் மிகுந்த வர்த்தக உலகை எதிர்கொள்ள மனித வளத்தை தயார்படுத்துதல்' என்றக் கருத்தில், என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை, தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் நெய்வேலி மையம் இணைந்து நெய்வேலி கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தக் கருத்தரங்கை அண்மையில் நடத்தின.
 என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பேசுகையில், இன்றைய வர்த்தகச் சூழலில் மனிதவள வல்லுநர்கள் தங்களது நிறுவன மேம்பாட்டுக்காக முக்கிய பங்காற்றி வருகின்றனர். முன்பு பணியாளர் நிர்வாகம் என அழைக்கப்பட்ட இந்தத் துறையானது, பல புதிய பெயர்களில் பரிணமித்து தற்போது வர்த்தக மேம்பாட்டுக்கான பங்குதாரர் என்ற நிலையை அடைந்துள்ளது என்றார். என்எல்சி முன்னாள் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கருத்தரங்கை தொடக்கி வைத்தார். என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதள்ள நாக மகேஷ்வர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சவுக்கி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
 என்எல்சி இந்தியா மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் ஜோ.ஸ்டீபன் டோமினிக் வரவேற்றார்.
 நிகழ்ச்சிகளை என்எல்சி இந்தியா மனிதவளத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஓ.எஸ்.ஞானசேகர் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மனித வளத் துறை நிபுணர்கள் உரையாற்றினர்.
 அவர்கள், 2025-ஆம் ஆண்டில் மனித வளத் துறையில் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள், வியூகங்கள், வர்த்தகத்தை மாற்றுவதற்கான எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட கருத்துகளில் பேசினர்.இயக்குநர் ஆர்.விக்ரமன் ஏற்பாடுகளை செய்திருந்தார். கருத்தரங்கில் சுமார் 130 மாணவர்கள் பங்கேற்றனர்.
 கருத்தரங்க நிறைவு விழாவில், திருச்சி, இந்திய மேலாண்மைக் கல்வி நிலைய இயக்குநர் பீமராய மெட்ரி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், செயற்கை அறிவாற்றல் என்ற நவீன தொழில்நுட்பம் உலகில் விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருவதால் மாணவர்கள் அதற்கேற்ப தங்களது கல்வியை தேர்வு செய்வது அவசியம் என்றார்.
 கருத்தரங்கின் ஒரு பகுதியாக எதிர்கால வர்த்தகத்தில் எனது பங்கு என்ற கருத்தில் சொற்றொடர் அமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் பீமராய மெட்ரி, என்எல்சி இயக்குநர் ஆர்.விக்ரமன் ஆகியோர் பரிசளித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com