சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே வியாழக்கிழமை இரவு டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்களைத் தாக்கி, பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள ராசாப்பாளையத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் புதுப்பேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (40), கீழ்மாம்பட்டைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் மேற்பார்வையாளர்களாகவும், நெல்லிக்குப்பம் அருகே உள்ள வெள்ளக்கரையைச் சேர்ந்த ஆனந்தமுருகன் (42), மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா, பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர்,  புதுப்பேட்டையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, தயாளன் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
  இவர்களுக்கு உதவியாக கெங்கராயனூரைச் சேர்ந்த குழந்தைவேல் (46), புதுப்பேட்டையைச் சேர்ந்த மனோகர் இருந்து வருகின்றனராம். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடிந்து, மதுக் கடையைப் பூட்டிக் கொண்டு, அனைவரும் புறப்பட்டனர். கடையின் மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் பாதுகாப்புடன் விற்பனைத் தொகையை வீட்டுக்கு எடுத்துச் சென்றாராம். விற்பனையாளர் ஆனந்தமுருகன், உதவியாளர் குழந்தைவேலு ஆகியோர் பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
   அவர்கள் கட்டமுத்துப்பாளையம் அருகே சென்ற போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வழி மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டனராம்.
  வியாபாரப் பணம் முழுவதையும் மேற்பார்வையாளர் எடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறியதும், அவர்கள் இருவரையும் தாக்கி, பையில் இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினராம்.
  அந்த வழியாகச் சென்றவர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி. நாகராஜ், காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 
  மேலும், தப்பியோடிய முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai