மதுக் கடை ஊழியர்களிடம் பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது

பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்களை தாக்கி பணம் பறித்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.


பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்களை தாக்கி பணம் பறித்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள ராசாப்பாளையத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் புதுப்பேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (40) மேற்பார்வையாளராகவும், நெல்லிக்குப்பத்தை அடுத்த வெள்ளக்கரையைச் சேர்ந்த ஆனந்தமுருகன் (42) விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக கெங்கராயனூரைச் சேர்ந்த குழந்தைவேல் (46) பணிபுரிந்து வந்தார். 
கடந்த 14-ஆம் தேதி இரவு வியாபாரம் முடிந்து மதுக் கடையை பூட்டிக்கொண்டு புறப்பட்டனர். கடை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனைத் தொகையை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். விற்பனையாளர் ஆனந்தமுருகன், உதவியாளர் குழந்தைவேல்  இருவரும் பைக்கில் புறப்பட்டனர். இவர்கள் கட்டமுத்துப்பாளையம் அருகே சென்றபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து, மதுக் கடை ஊழியர்களை கத்தியால் தாக்கி அவர்களிடமிருந்து ரூ.2,350 
பணத்தை பறித்துச்சென்றனர். 
இந்தச் சம்பவம் தொடர்பாக பண்ருட்டி காவல் ஆய்வாளர் ப.சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், பண்ருட்டி இணைப்பு சாலையில் ஆய்வாளர் ப.சண்முகம் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை வாகன சோதனையில்  ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் 
காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஜெயங்கொண்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் பாலமுருகன் (26), மரக்காணம், பெருமக்கல், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலா (27), பண்ருட்டி வட்டம், பணப்பாக்கம், புதுகாலனி டேங்க் தெருவைச் சேர்ந்த கார்வண்ணன் மகன் புருஷோத்தமன், நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பாலமுருகன் (23) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனராம். 
தீவிர விசாரணையில் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. 
வழிப்பறி வழக்கில் பண்ருட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள். , அண்மையில் மேல்குமாரமங்கலத்தில் அதிமுக பிரமுகர் பழனியப்பன் வீட்டில் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனராம். 
இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.2,350 பணம், மூன்றரை பவுன் தங்க நகை, 3 கத்திகள், செல்லிடப்பேசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com