தேர்தல் பணியில் காவலர்கள் பாரபட்சம் காட்டக் கூடாது: மாவட்ட எஸ்பி

தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் எவ்விதமான பராபட்சமும் காட்டக் கூடாதென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்

கடலூர்: தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் எவ்விதமான பராபட்சமும் காட்டக் கூடாதென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்  அறிவுறுத்தினார். 
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆயுதப் படை காவலர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் கடலூரில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பேசியதாவது: 
கடந்த 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த விதிகளை காவல் துறையினர் நன்றாக தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். முதலில் காவலர்கள் விதிகளை தெரிந்துகொண்டால் மட்டுமே அதனை மற்றவர்கள் மீறுகிறார்களா என்பதைக் கண்காணிக்க முடியும்.
தேர்தலில் காவல் துறையினர் தேர்தலுக்கு முன்பு, தேர்தல் நாளில், தேர்தலுக்கு பின்பு என 3 வகையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் பணிக் காலத்தில் காவல் துறையால் எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற விவாதங்கள், விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தேர்தல் பணிக் காலத்தில் தெரிந்தவர்கள், உறவினர்கள், கட்சியினருக்கு சலுகையோ, பாரபட்சமோ காட்டக் கூடாது என்றார் அவர். 
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.அசோக்குமார், ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.சரவணன், ஆய்வாளர் கே.விஜயகுமார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்பி கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 288 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதைத் தொடர்ந்து அவைகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டு, 250 துப்பாக்கிகள் வரை பெறப்பட்டுள்ளன. மீதமுள்ளவை வங்கி பாதுகாப்பு பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. 
167 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: மாவட்டத்தில் 163 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 4 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 780 துணை ராணுவ வீரர்களை கோரியுள்ளோம். 
பழைய குற்றவாளிகள் 8 பேரை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதோடு, 380 பேரை கண்டறிந்து அவர்களை கோட்டாட்சியர் விசாரணைக்கு உள்படுத்தியுள்ளோம் என்றார் எஸ்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com