மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் நிலையை உருவாக்க வலியுறுத்தல்

தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் நிலையை உருவாக்க வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள்

கடலூர்: தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் நிலையை உருவாக்க வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தினர்.
மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவான நிலையை உருவாக்குது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வி.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகையில், தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். வாக்குச் சாவடிக்குள் எளிதில் செல்லும் வகையில் சக்கர நாற்காலி, வாக்குச் சாவடி முகப்பில் சாய்தளம், குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான சிறுநீர் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும். பார்வையற்றவர்களுக்கு ப்ரெய்லி முறையிலான வாக்குச் சீட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அரசே அவர்களுக்கு போதுமான வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் 52 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆனால், வாக்காளர் பட்டியலில் மாற்றுத் திறனாளிகள் 13 ஆயிரம் பேர் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றவர்களும் உடனடியாக டரஈ என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன் மூலமாக அவர்களது வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடியும். அனைவரும் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் தபால் வாக்கு வழங்குகிறது என்றும் அவர் கூறினார். 
கூட்டத்தில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த முனைவர் ஜானகிராஜா, பொன்.சண்முகம், எஸ்.சையதுமுஸ்தபா, சிவ.ரவிச்சந்திரன், சி.கே.சந்தோஷ், முனுசாமி, ஆர்.தட்சிணாமூர்த்தி, ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com