அதிமுக ஆட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிப்பு: ச. ராமதாஸ்

அதிமுக ஆட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கடலூரில் பாமக நிறுவனர் ச. ராமதாஸ் பேசினார்.
அதிமுக ஆட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிப்பு: ச. ராமதாஸ்

அதிமுக ஆட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கடலூரில் பாமக நிறுவனர் ச. ராமதாஸ் பேசினார்.
 அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக கடலூர் மக்களவைத் தொகுதியிலும், அதிமுக சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடலூர் வேட்பாளர் ஆர்.கோவிந்தசாமி, சிதம்பரம் வேட்பாளர் பொ.சந்திரசேகர் ஆகியோரை அறிமுகப்படுத்தும் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் ஆ.அருண்மொழிதேவன் முன்னிலை வகித்தார்.
 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் பேசியதாவது: எதிர்க்கட்சியின் வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழக்கும் அளவுக்கு கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அதிமுக என்றதும் சத்துணவுத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் ஆகியவை தான் நினைவுக்கு வரும்.
 69 சதவீத இடஒதுக்கீட்டை 9 ஆவது அட்டவணையில் சேர்த்த பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே சாரும்.
 பொங்கல் பண்டிகைக்கு ரூ.ஆயிரம், ஏழைக்குடும்பத்துக்குரூ.2 ஆயிரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதனால் தான் மக்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
 பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவர் தான் மீண்டும் பிரதமர் என்பது உறுதியான ஒன்று. ஆகவே, இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
 அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது: 2019 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு வெற்றி ஆண்டு. நெகிழி தடை, ஏழை, எளிய குடும்பத்தினருக்கு நிதி உதவி என்று அமல் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளோம். இந்த வெற்றி தேர்தலிலும் தொடரும். நமது கூட்டணியால் எதிர்க்கட்சிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கையில் திமுக அளித்துள்ளது என்றார்.
 மேற்கு மாவட்ட செயலாளர் ஆ.அருண்மொழிதேவன் பேசியதாவது: துணிச்சலான பிரதமரை நாம் பெற்றுள்ளோம். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நமது பிரதமர் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார். எனவே, இந்தக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
 சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி சொரத்தூர் ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக மாவட்ட செயலாளர்
 ப.சிவக்கொழுந்து, தமாகா துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பாமக துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் வரவேற்க, அதிமுக நகர செயலாளர் ஆர்.குமரன் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com