வாகனத் தணிக்கையில் ரூ.6.59 லட்சம் பறிமுதல்

கடலூரில் வெவ்வேறு இடங்களில் நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகனத் தணிக்கையில் மொத்தம் ரூ.6.59 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூரில் வெவ்வேறு இடங்களில் நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகனத் தணிக்கையில் மொத்தம் ரூ.6.59 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 7 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 63 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
 வட்டாட்சியர் கே.நந்திதார தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர்கள் என்.ஆர்.ரமேஷ்குமார், ப.கஜேந்திரன், ஞானசேகரன் கொண்ட நிலை கண்காணிப்புக் குழுவினர் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மருதாடு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற காரை சோதனையிட்டதில் ரூ.1,46,140 ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பட்டாணி வியாபாரியான சின்ன கங்கணாங்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசனிடம் விசாரணை நடத்தினர்.
 அவர், கடைகளுக்கு விற்கப்பட்ட பட்டாணிகளுக்கான வசூல் செய்த பணம் எனத் தெரிவித்தார். ஆனாலும், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல வட்டாட்சியர் ஆர்.கீதா தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் பறக்கும் படையினர் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்த வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த சத்தியபிரபுவிடம் ரூ.2,16,210 ரொக்கப் பணம், பண்ருட்டியைச் சேர்ந்த குமரேசனிடம் ரூ.1,51,430 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 இவர்கள், சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கும் நிறுவனத்தின் பணியாளர்கள் என்றும் கடனை வசூலித்த பணம் என்றும் தெரிவித்தனர். ஆனாலும், உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை.
 இதே போல, இந்த பறக்கும் படையினர் மோட்டார் சைக்கிளில் சென்ற மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த செந்தில்முருகனிடமிருந்து ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இவர், கன்னியக்கோயிலில் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்வதாகவும், வங்கியில் பணம் செலுத்தச் செல்வதாகவும் தெரிவித்தார். ஆனாலும், 3 பேரிடமும் உரிய ஆவணம் இல்லாததால் பணம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடலூரில் 4 வெவ்வேறு சம்பவங்களில் பிடிபட்ட மொத்தம் ரூ.6,58,780 வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com