இன்று மின்சார ரயில் சோதனை ஓட்டம்
By கடலூர் | Published On : 22nd March 2019 09:26 AM | Last Updated : 22nd March 2019 09:26 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை மின் ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
சென்னை - திருச்சி மெயின்கார்டு ரயில்வே வழித் தடத்தில் கடலூர் அமைந்துள்ளது. தற்போது அகல ரயில் பாதையாக உள்ள இந்த ரயில்வே வழித் தடத்தை மின்மயமாக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக, விழுப்புரம் முதல் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை மின்பாதையாக மாற்றப்படுகிறது. இதற்காக, கடந்த சில மாதங்களாக மின்கம்பங்கள் நடுதல், மின்வயர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் - கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையங்கள் இடையிலான மின்பாதைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பெங்களூரைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வெள்ளிக்கிழமை கடலூர் வருகிறார். அப்போது, மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. எனவே, மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் பொதுமக்கள் யாரும் இந்த வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் இடையிலான மின்பாதையில் மார்ச் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையில் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...