குழாயில் உடைப்பு: கடலூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
By DIN | Published On : 24th March 2019 01:15 AM | Last Updated : 24th March 2019 01:15 AM | அ+அ அ- |

கடலூர் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் பணிக்கு பள்ளம் தோண்டியபோது, பிரதான குடிநீர் குழாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமும், திருவந்திபுரம், சாவடி பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தும் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில், நெல்லிக்குப்பம் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிரதான குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
குறிப்பாக நெல்லிக்குப்பம் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே குடிநீர் குழாய் உடைந்ததால் மஞ்சக்குப்பம், வண்ணாரப்பாளையம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை இந்தப் பகுதியில் ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டது. மற்ற இடங்களில் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படவில்லை என பொதுமக்கள் கூறினர். குடிநீர் குழாய் உடைந்தது குறித்த தகவலை நகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் கூறவில்லையாம். மேலும், குழாய் உடைப்பை சீரமைப்பதில் நகராட்சி அதிகாரிகளும் போதிய கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் கடலூரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப் பயன்படுத்தி பல இடங்களில் டிராக்டர் மூலம் லாப நோக்கில் குடிநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. கடலூர் நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் திட்டப் பணிகள் அரசுத் துறையினரிடம் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெறுகின்றன. இதனாலேயே குடிநீர் குழாய் உடைப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
நகரில் நேதாஜி சாலை, பாரதி சாலைகள் அண்மையில் நெடுஞ்சாலைத் துறையினரால் சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில், குடிநீர் குழாய்கள் புதைப்பதற்காக அந்த சாலை ஓரம் தற்போது பள்ளம் தோண்டுகின்றனர். தற்போது, நெல்லிக்குப்பம் சாலையில் கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டுகின்றனர். அரசு துறையினருக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்கெனவே மேற்கொண்ட கட்டமைப்புகள் சேதமடைவதும், மக்களின் வரிப் பணம் வீணாவதும் தொடர்கிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.