சின்னம் ஒதுக்குவதில் காலம் கடத்தினார்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் காலம் கடத்தினார்கள் என அந்தக் கட்சித் தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதி திமுக


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் காலம் கடத்தினார்கள் என அந்தக் கட்சித் தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
 சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது: 
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுகுறித்த சட்டச் சிக்கல்களை அவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து, சிதம்பரம் (தனி) தொகுதியில் நான் தனி சின்னத்திலும், விழுப்புரம் (தனி) தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்தோம்.
 சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம். ஆனால், கிடைக்கவில்லை. பின்னர், அதிகாரிகள் என்னென்ன சின்னங்கள் உள்ளன என்ற பட்டியலை அளித்தனர். அதன்படி, வைரம் சின்னம் கேட்டோம். ஆனால், அந்தச் சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்றனர்.
அடுத்து, கடலூர் மாவட்டத்துக்கு பெருமை வாய்ந்த பலாப்பழம் சின்னத்தைக் கேட்டோம். ஆனால், அந்தச் சின்னமும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்றனர். இதையடுத்து, ஏதாவது ஒரு சின்னத்தை கொடுங்கள் என்றேன். அப்போது டேபிள் சின்னம் இருக்கிறது எனக் கூறினார். அந்தச் சின்னம் அதிகாரத்துக்குரியது என்பதால் வேண்டாம் என்றேன். 
 தமிழகத்தில் விண்ணப்பித்த அனைத்துக் கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கிவிட்டு எனக்கு காலம் கடத்தினார்கள். அப்போதுதான் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பானை சின்னம் உள்ளதா எனக் கேளுங்கள் என்றார். இதையடுத்து, அதிகாரிகளிடம் கேட்டபோது அந்தச் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை என்றனர். உடனே அந்தச் சின்னத்தைக் கேட்டு விண்ணப்பித்தேன். இதையடுத்து, பானை சின்னம் ஒதுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தேன். 
 ஆந்திர மாநிலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 மக்களவைத் தொகுதிகளிலும், 35 சட்டப் பேரவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அங்கு எங்களுக்கு ஸ்டூல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கேரளம், கர்நாடகத்தில் தலா 2 தொகுதிகளில் எங்களது கட்சி போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இந்தத் தேர்தலில் 2 செயல்திட்டங்கள்தான். மத்தியில் மோடி அரசை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசை அகற்ற வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com