Enable Javscript for better performance
மத்தியில் வமையான ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- Dinamani

சுடச்சுட

    

    மத்தியில் வமையான ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

    By கடலூர்/புதுச்சேரி/விழுப்புரம்,  |   Published on : 28th March 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
     அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
     அப்போது அவர் பேசியதாவது:
     மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட கட்சிகள் அதிமுக தலைமையில் ஓரணியாகவும், மக்கள் உரிமைகளை, நீராதார உரிமைகளை பாதுகாக்கத் தவறியவர்கள் திமுக தலைமையில் ஓரணியாகவும் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றனர். மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியிலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியவர்கள் யார் என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
     முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு 4 அணைகளை கட்டியதற்கு திமுக ஆட்சேபம் கூட தெரிவிக்கவில்லை. இதனால், தமிழகத்துக்கு வந்து சேரும் நீரின் பங்கு குறைந்து, காவிரி டெல்டா மாவட்டங்கள் வறண்டு போயின.
     இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றபோது, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. தமிழகத்துக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் கொண்டு
     வரப்படவில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. ரூ.1,400 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை, பொலிவுறு நகரம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு வந்தன. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறது.
     அதேபோல, தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, சட்டப் போராட்டம் நடத்தி 2013-இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட வைத்தார். இதன் மூலம் நீராதார உரிமை பாதுகாக்கப்பட்டது.
     அவரது தலைமையிலான அதிமுக ஆட்சியில், விலையில்லா அரிசி, குடிசைகளை கல் வீடாக மாற்றும் திட்டம், மகப்பேறு நிதி உதவி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம், பசுமை வீடுகள், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோன்ற திட்டங்கள் தற்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் தொடர்கின்றன. ஜாதி கலவரம், மதக் கலவரம் ஏதும் இல்லை. அமைதிப்பூங்காவாக தமிழகம் விளங்குகிறது. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
     ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, சாதி, மத மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன.
     தற்போது எதிர்க் கட்சியாக இருக்கும்போது கூட பல்வேறு அராஜகங்களில் அந்தக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகிறது.
     அதேவேளையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, தேர்தலையொட்டி சைக்கிளில் வலம் வந்தும், கடைகளில் தேநீர் அருந்தியும், பல்வேறு வேடங்கள் போட்டும் பொதுமக்களைக் கவர முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி மக்களிடம் எடுபடவில்லை. அதிமுகவில் அடிமட்ட தொண்டரும் முதல்வராக முடியும். அந்த உள்கட்சி ஜனநாயகம் திமுகவில் இல்லை.
     ஆகவே, தமிழகத்தில் நல்லாட்சி தொடரவும், மத்தியில் வலிமையான ஆட்சி அமையவும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
     பிரசாரத்தின்போது, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலர் இரா.குமரகுரு, லட்சுமணன் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     கடலூரில்...: கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமியை ஆதரித்து, கடலூர் உழவர்சந்தையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 2011-இல் சட்டப்பேரவை உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட இரா.கோவிந்தசாமி, இந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
     முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகியவை நிகழ்ந்தன. அதைத் தடுத்து, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியவர் ஜெயலலிதா. ஆகவே, நல்லவை காப்பாற்றப்பட வேண்டும். தீயவை அகற்றப்பட வேண்டும். அந்த வகையில், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லதைச் செய்யாத திமுக-காங். கூட்டணியை புறந்தள்ளி, அதிமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர். உடன் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
     புதுச்சேரியில்...: அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புதுவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.நாராயணசாமி, தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி வேட்பாளர் ப.நெடுஞ்செழியன் ஆகியோரை ஆதரித்து புதுச்சேரியில் 5 இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
     அப்போது அவர் பேசியதாவது: புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து எனும் நீண்டகால கோரிக்கை நிறைவேற, அதிமுக துணை நின்று, முழு முயற்சி எடுக்கும். புதுவையில் நடைபெறும் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி, மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவும், மத்திய அரசிடமிருந்து தொலைநோக்குத் திட்டங்களைப் பெறவும் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. மாறாக, அவ்வப்போது, ஏதாவது ஒரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலின் முடிவில், மத்தியில் வலிமையான ஆட்சி அமைவதுடன், புதுவையில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி மலரும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai