மேம்பால அணுகு சாலை: வட்டாட்சியர் ஆய்வு

பண்ருட்டியில் ரயில்வே மேம்பால அணுகு சாலைப் பணி தொடர்பாக வட்டாட்சியர் கீதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பண்ருட்டியில் ரயில்வே மேம்பால அணுகு சாலைப் பணி தொடர்பாக வட்டாட்சியர் கீதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டியில் சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் ரூ.22 கோடி மதிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு பாலம் பணி முடிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
பாலம் கட்டுமானப் பணி தொடங்கியது முதல் அதையொட்டி இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என  அந்தப் பகுதி மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டன. 
இதையடுத்து, அணுகு சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கடை மற்றும் நில உரிமையாளர்கள் அணுகுசாலைக்காக தங்களது நிலங்களை விட்டுத் தரவும், இதற்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர். இதையடுத்து அணுகு சாலை அமைப்பதற்காக கடைகளை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே இடித்து வருகின்றனர். 
இங்கு 4.5 மீட்டர் அகலத்தில் வடிகால் வசதியுடன் அணுகு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை வழியாக இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், எனவே, அணுகு சாலையை அகலப்படுத்தித் தர வேண்டுமென்றும் பண்ருட்டி வட்டாட்சியரிடம் ஒருதரப்பினர் மனு அளித்தனர். 
அதன்பேரில், வட்டாட்சியர் கீதா அணுகு சாலை அமைக்கப்படும் பகுதியில் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
 பின்னர் அவர் கூறுகையில், அணுகு சாலை விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அப்போது, துணை வட்டாட்சியர் தனபதி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com