சிதம்பரம் நடராஜர் கோயில் பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வருகிற 12-ஆம் தேதி கே.ஜே.யேசுதாஸின் பாட்டுக் கச்சேரி நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வருகிற 12-ஆம் தேதி கே.ஜே.யேசுதாஸின் பாட்டுக் கச்சேரி நடைபெறுகிறது.
 இந்தக் கோயிலில் சபாபதி சங்கீத கான சபா சார்பில் நாட்டியம் மற்றும் இசை விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலின் ஆயிரங்கால் மண்டப முகப்புப் பகுதியில் தினமும் நாட்டியம், பாட்டுக் கச்சேரி நடைபெற்று வருகிறது.
 விழாவில், ஞாயிற்றுக்கிழமை மாலை "சிவாயநம பஞ்சாக்ஷரம்' என்ற தலைப்பில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 95-க்கும் மேற்பட்ட நாட்டியப் பள்ளிகளைச் சேர்ந்த 2,500 மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபம் முன் உள்ள நடனப் பந்தலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை உ.வெங்கடேச தீட்சிதர் தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்ற நாட்டியக் கலைஞர்களுக்கு "யுவகலா நாட்டிய வளர்மணி' என்ற பட்டமும், நாட்டியப் பள்ளிகளுக்கு "நாட்டியக்கலா சேவா மந்திர்' பட்டமும், "நாட்டிய பயிற்றுநர்' குருக்களுக்கு "பரதகலா சூடாமணி' பட்டமும் வழங்கப்பட்டது.
 மே 12-இல் கே.ஜே.யேசுதாஸ் பாட்டுக் கச்சேரி: இதுகுறித்து சபாபதி சங்கீத கான சபா செயலர் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டியம் மற்றும் இசை விழாவை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி பத்மபூஷண் கே.ஜே.யேசுதாஸின் பாட்டுக் கச்சேரி மாலை 6 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெறுகிறது. முன்னதாக 11-ஆம் தேதி சபா சார்பில் பிரபல கலைஞர்கள், பிரமுகர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் யுஎஸ்ஏ இன்டர்நேஷனல் தமிழ்ப் பல்கலைக்கழகத் தலைவர் எஸ்.செல்வின்குமார் பங்கேற்று, யு.யு.கே.சேதுமகாதேவ தீட்சிதர், திருவாரூர் பக்தவத்சலம், யு.சாம்பநடேச தீட்சிதர், எஸ்.ஆர்.ராமநாதன் செட்டியார் உள்ளிட்ட 25 பேருக்கு கௌரவ முனைவர் பட்டங்களை வழங்குகிறார். பேராசிரியர் ஏ.வி.ரங்காச்சாரி, டி.சுப்பிரமணிய தீட்சிதர், பி.ராஜமன்னன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com