கார் மோதியதில் ஒருவர் பலி: 3 பேர் காயம்
By DIN | Published On : 16th May 2019 08:46 AM | Last Updated : 16th May 2019 08:46 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே புறவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சாலையோரம் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள சாலியந்தோப்பு பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் புகழேந்தி (45). இவர், செவ்வாய்க்கிழமை தனது மனைவி செல்வராணியுடன் (40) மோட்டார் சைக்கிளில் பழையநல்லூர் கிராமத்தில் இருந்து சிதம்பரத்துக்குச் சென்றார்.
இதேபோல, சீர்காழி மேற்குத் தெரு வசந்தம் நகரைச் சேர்ந்த செல்லப்பன் மகன் சுரேஷ் (40), தனது மனைவி பிரியாவுடன் (33) மோட்டார் சைக்கிளில் சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சிதம்பரம் அருகே கடவாச்சேரி என்ற இடத்தில் வளைவுப் பகுதியில் வந்த போது, கடலூரில் இருந்து சீர்காழி நோக்கி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் புகழேந்தி, அவரது மனைவி செல்வராணி, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ், அவரது மனைவி பிரியா ஆகிய 4 பேரும் துக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் புகழேந்தி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.