கிராமப்புற அஞ்சலகங்களில் கணினி இயந்திரம் பழுது: பொதுமக்கள் அவதி

கிராமப்புற அஞ்சலகங்கள், சிறு வங்கிகளாகச் செயல்பட கணினி மயமாக்கப்பட்டு 6 மாதங்களாகியும் அங்கு வழங்கப்பட்ட கணினி சாதனங்கள் செயல்படாததால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கிராமப்புற அஞ்சலகங்கள், சிறு வங்கிகளாகச் செயல்பட கணினி மயமாக்கப்பட்டு 6 மாதங்களாகியும் அங்கு வழங்கப்பட்ட கணினி சாதனங்கள் செயல்படாததால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற அஞ்சலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகின்றன. கிராமப்புற அஞ்சலகங்களில் வங்கிக்கான சேவையைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தச் செயல்பாடு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
 ஆனால், இதைச் செயல்படுத்துவதற்கான தஇப க்ங்ஸ்ண்ஸ்ரீங் பீபிஎம் கணினி சாதனம் அஞ்சலகங்களில் சரிவர வேலை செய்யவில்லையாம். இதற்குக் காரணம் அந்த சாதனம் இயங்க போதுமான இணையவழித்தடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், சேவைகளைப் பெறமுடியவில்லை.
 இதுகுறித்து அஞ்சலக ஊழியர்கள் தெரிவித்ததாவது: பீபிஎம் சாதனம் செயல்படாதது குறித்து உயரதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. வேறு இணைய வழித்தடத்தை மாற்றி வழங்க வேண்டும் அல்லது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இணைய வழித்தடத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தனியார் இணைய வழித்தடத்தையே பயன்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், அஞ்சலக சேவை பெரும் பாதிப்படைந்துள்ளது என்றனர் அவர்கள்.
 இதுகுறித்து சிதம்பரம் தலைமைத் தபால் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "இதுகுறித்து நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. கடலூர் மாவட்டத் தலைமை அஞ்சலகத்தில் என்ன உத்தரவு வருகிறதோ அதைத்தான் நாங்கள் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.
 இதுகுறித்து கடலூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களும் இதே பதிலையே கூறினர்.
 எனவே, இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில், அதிக வேகமுள்ள இணைய வழித்தடத்தை வழங்கி, கிராமப்புற அஞ்சலகங்களின் சேவையை விரைவு படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com