சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 16th May 2019 08:56 AM | Last Updated : 16th May 2019 08:56 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் புதன்கிழமை பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
அதன்படி, 638 போலி மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ஆலடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், போலீஸார் சிவலிங்கம், சரவணன், சிவக்குமார், தனிப் பிரிவு தலைமைக் காவலர் ரமேஷ் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார்.
காரில் கடத்தப்பட்ட 525 லிட்டர் மது பானத்தை மடக்கிப் பிடித்த கடலூர் உள்கோட்ட குற்றப் பிரிவு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி, தலைமைக் காவலர்கள் ஆறுமுகம், தண்டபாணி, செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோரையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.