முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 18th May 2019 07:59 AM | Last Updated : 18th May 2019 07:59 AM | அ+அ அ- |

கடலூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.18-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.