முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
3.40 டன் நெகிழிப் பைகள் பறிமுதல்
By DIN | Published On : 18th May 2019 08:00 AM | Last Updated : 18th May 2019 08:00 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் நகர கடைகளில் நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் 3.40 டன் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்தது. இதுகுறித்த புகாரை தொடர்ந்து சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பால்டெவிட்ஸ் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜாராம், பாஸ்கர், தில்லை, காமராஜ், ஆனந்தகுமார், சக்கரவர்த்தி ஆகியோர் மேலவீதி, வீரபத்திரசாமி கோயில் தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேலவீதியில் தனியார் விடுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தியபோது 40 கிலோ நெகிழிப் பைகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, வீரபத்திரசாமி கோயில் தெருவில் உள்ள மொத்த வியாபாரக் கடையின் பின்புறமுள்ள கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 3 டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட நெகிழி கப்புகள், தட்டுகள், நெகிழி உறைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலவீதி உள்ள கடை உரிமையாளருக்கு
ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிதம்பரம் நகரில் வெள்ளரிக்காய் விற்பவர் முதல் உணவு விடுதிகள் வரை நெகிழிப் பைகளின் பயன்பாடு உள்ளது. ஆனால், தற்போது நகராட்சி அதிகாரிகள் பெயரளவில் சில கடைகளில் மட்டும் சோதனை நடத்தியுள்ளனர்.
எனவே, அனைத்து கடைகளிலும் சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்படும் என்றனர்.