தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முதலாமாண்டு நினைவு தினம்
By DIN | Published On : 23rd May 2019 08:13 AM | Last Updated : 23rd May 2019 08:13 AM | அ+அ அ- |

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22 -ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் கடலூரில் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுப்புராயன், எஸ்.என்.கே.ரவி, ஆலோசகர் தி.ச.திருமார்பன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, மீனவர் பேரவையின் மாநிலச் செயலர் எஸ்.கெஜேந்திரன், இ.கம்யூ. நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் ராயர் ராஜாங்கம், பருதிவாணன், தர்மராஜ், இரா.பாபு, கார்த்திகேயன், எம்.சாய்ராம், தருமர் உள்பட பலர் இரங்கல் உரையாற்றினர்.
கூட்டத்தில் மே 22- ஆம் தேதியை உலக அளவில் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இந்தச் சம்பவத்துக்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கூட்டமைப்பினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.