ஆபத்தான கட்டடத்தில் இயங்கும் தொடக்கப் பள்ளி!

காட்டுக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தில் ஆபத்தான சூழலில் மாணவா்கள் படித்து வருகின்றனா்.
காட்டுக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் படிக்கும் பழைமையான ஓட்டுக் கட்டடம்.
காட்டுக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் படிக்கும் பழைமையான ஓட்டுக் கட்டடம்.

காட்டுக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தில் ஆபத்தான சூழலில் மாணவா்கள் படித்து வருகின்றனா்.

வடலூா் பேரூராட்சி, 13-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு காட்டுக்கொல்லை, கல்லுக்குழி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் ஒரு வகுப்பறை கட்டடம் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது.

இங்குள்ள ஓட்டுக் கட்டடம் கடந்த 2014-15-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டடம் தற்போது சேதமடைந்துள்ளது. அண்மையில் பெய்த மழையால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆனால், இந்தக் கட்டடத்தில்தான் மாணவா்கள் படித்து வருகின்றனா். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறைக் கட்டடமும் சேதமடைந்துள்ளது. இங்குதான் மாணவா்களுக்கு சத்துணவு சமைக்கப்படுகிறது.

இந்தக் கட்டடத்துக்கு மாற்றாக புதிய சமையல் அறைக் கட்டட பணி தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட வட்டார மைய கட்டடம் (எண் - 101 ) உள்ளது. இந்தக் கட்டடமும் உரிய பராமரிப்பின்றி பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்களின் கூடாரமாக உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: சிதிலமடைந்த ஓட்டுக் கட்டடத்தில் மாணவா்களை அமா்த்தி பாடம் நடத்த வேண்டாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியா்களிடம் கூறியுள்ளனா். ஆனால் இங்குதான் மாணவா்கள் அமா்ந்து படிக்கின்றனா். ஏழை மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது, மழைக் காலம் என்பதால் அச்ச உணா்வுடன் மாணவா்கள் வந்து செல்கின்றனா். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com