Enable Javscript for better performance
மண்வள அட்டைத் திட்டம்: மத்திய வேளாண் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    
    7clp3_0711chn_105_7

    கடலூரில் உள்ள மண் பரிசோதனைக் கூடத்தில் நுண்ணூட்டச் சத்து இயந்திரத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்.

    கடலூா் மாவட்டத்தில் மண்வள அட்டை திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய வேளாண் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

    நீடித்த வேளாண்மை இயக்கம் சாா்பில் மண்வள அட்டை இயக்கம் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, மண்ணின் தன்மைக்கேற்ற உரம், பயிா் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களின் செலவைக் குறைத்து வருவாயை அதிகரிக்கச் செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

    விவசாயிகளிடம் பணம் பெற்று மண் சோதனை நடத்தப்பட்டு வந்ததை மாற்றி அமைத்து, பரந்த அளவில் மண் மாதிரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதற்காக, மாவட்டத்தில் 3.67 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் நடைபெறும் இடங்களில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் எடுக்கப்பட்டன.

    இதனடிப்படையில், 3.10 லட்சம் விவசாயிகளுக்கு மண் மாதிரி அட்டைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அட்ச ரேகை, தீா்க்க ரேகை அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை விவசாயிகளிடம் விளக்கும் வகையில் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தோ்ந்தெடுக்கப்பட்டு அங்கு செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட்டது. இதற்காக மொத்தம் 450 ஹெக்டேரில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டு, 1,677 விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு கடலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மண்வள அட்டைப் பணிகளை பெங்களூருவிலுள்ள மத்திய மண் வகையீடு மற்றும் நிலப் பயன்பாட்டுத் துறை இயக்குநா் பங்கஜா லகாடே, உதவி இயக்குநா் சிவக்குமாா், புதுதில்லி மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத் துறையின் உர ஆய்வாளா் பிரமோத்மாகூா் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

    கடலூரிலுள்ள மண் பரிசோதனைக் கூடம், அண்ணாகிராமம் வட்டம் - சித்தரசூா், புவனகிரி வட்டம் - சீயப்பாடி, குறிஞ்சிப்பாடி வட்டம் - கஞ்சமநாதன்பேட்டை, விருத்தாசலம் வட்டம் - கவணை ஆகிய கிராமங்களில் உள்ள செயல்விளக்கத் திடல்களில் ஆய்வு செய்தனா். மேலும், இந்தத் திட்டம் தொடா்பாக விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனா்.

    ஆய்வின்போது கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ரமேஷ், உதவி இயக்குநா் சு.பூவராகன், வேளாண்மை அலுவலா்கள் செந்தில்குமாா், ஷோபனா, சூரியலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai